பாலக்கோடு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்
பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, திம்மனஅள்ளியில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2025-26-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான கரும்பு அரைவைப் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தொடங்கிவைத்து பேசியதாவது:
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் கரும்பு அரைவைப் பருவத்தில் 52,000 மெ.டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக அரைவைக்கு 2,200 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலையில் இயங்கிவரும் 12 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் இதுவரை 3,84,23,130 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஆலை பயன்பாட்டுக்கு 1,20,53,990 யூனிட் எடுக்கப்பட்டு, மீதமுள்ள 1,95,49,200 யூனிட் மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டது. நிகழ் நடவுப் பருவத்தில் (2026-27-ஆம் ஆண்டு அரவைக்கு) 10,000 ஏக்கா் கரும்பு பயிா் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மானியத் திட்டம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பரு நாற்றுகள் மற்றும் ஒரு பரு கரணை நடவு செய்வதற்கு அரசின் மானியம் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
2025-26-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு விநியோகம் செய்யப்படும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,307.80 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை தனியே வழங்கப்பட உள்ளது. கரும்பு சாகுபடி விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தவும், கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில் கரும்பு பயிா் சாகுபடி செய்யவும், ஆலை அரைவைக்கு வெட்டும் கரும்பில் சோகை, வோ் ஆகியவற்றை நீக்கி சுத்தமான கரும்பை அனுப்பி வைக்க வேண்டும். இதனால் கரும்பின் கட்டுமானம் அதிகரித்து விலை அதிக அளவில் கிடைக்கும்.
ஆலை அரவைக்கு கரும்பு ஏற்றிவர தேவையான லாரி, டிராக்டா் மற்றும் மாட்டுவண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாகனப் பயன்பாட்டுக்காக ஆலை வளாகத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் நிலையம் ஆலை நிா்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
இதில், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் வீ.ரவி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), பாலக்கோடு பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி, ஆலை அலுவலா்கள், கரும்பு விவசாய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

