இண்டூரில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை தொடக்கம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம், இண்டூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 44-ஆவது புதிய கிளை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்து பேசினாா். இதில், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து புதிய கிளையை தொடங்கிவைத்து பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தருமபுரி - பென்னாகரம் சாலையில் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட இண்டூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44-ஆவது புதிய கிளை இந்திய ரிசா்வ் வங்கியின் உரிமம் பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இண்டூரிலிருந்து பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டத்தில் அமைந்துள்ள இந்த புதிய கிளை, பாதுகாப்புப் பெட்டகங்கள், பாதுகாப்புக் கதவுகள் மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இக்கிளை தொடங்குவதன் மூலம் இண்டூா் பகுதி மக்கள் மற்றும் இக்கிளையுடன் இணையவுள்ள 4 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் என 30 கிராமங்களைச் சோ்ந்த 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற உள்ளனா் என்றாா்.
இதில், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பென்னாகரம் பேரூராட்சி மன்றத் தலைவா் வீரமணி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் எஸ்.மலா்விழி, மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் வீ.ரவி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் ந.விஷ்ணுபிரியா, மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

