கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்கம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம், இண்டூரில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இம்முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் ரெ.சதீஷ் பேசியதாவது:
கோமாரி நோய் கால்நடைகளைக் தாக்கி காய்ச்சல், கொப்பளங்களை ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீா், உமிழ்நீா், பண்ணைக் கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகள் சினைப்பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குைல், தோல் மற்றும் தோல் பொருள்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைத் திறன் பாதிப்பு, கன்றுகளின் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளா்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பாக 3,45,500 கறவை மாடுகள், எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் டிச. 29 முதல் வரும் ஜன.18 வரை 21 நாள்கள் நடைபெற உள்ளன. இம்மாவட்டத்திற்கு 3,52,050 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. கால்நடை உதவி மருத்துவா்கள் அடங்கிய 82 குழுக்கள் அமைக்கப்பட்டு, இப்பணி அனைத்து குக்கிராமங்கள், மலைக் கிராமங்களில் உள்ள மாடுகள், எருமைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என்றாா்.
இதில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அ.மரியசுந்தா், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, துணை இயக்குநா் அ.அருள்ராஜ், ஆவின் பொதுமேலாளா் மாலதி, கால்நடை மருத்துவா்கள், ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
