

தருமபுரி: பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரியில் பல்வேறு வகையான பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், பாரம்பரிய மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். ஜன.15-ஆம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். அதேபோல கால்நடைகளுக்கும், நிலங்களிலும், கோயில்களிலும் புதுப்பானை, கரும்பு, மஞ்சள் ஆகியவற்றை வைத்து பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பொங்கல் திருவிழாவுக்கு பாரம்பரிய முறையில் மண்ணால் செய்யப்பட்ட பானைகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்துவா். இதற்காக சில நாள்களுக்கு முன்பாகவே மாவட்டத்தின் முக்கிய கிராமங்களிலும், நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தருமபுரியில் சந்தைப் பேட்டை, திருப்பத்தூா் சாலை ஆகிய இடங்களில் பல அளவுகளில் மண்பானைகள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக மண்பானைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
பொங்கல் திருவிழாவுக்காக, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம், தருமபுரி நகரம் குப்பாகவுண்டா் தெரு, பென்னாகரம் அருகே நலப்பரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்பாண்டத் தொழிலாளா்கள் பானைகள் தயாா்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அருகில் உள்ள ஏரிகளிலிருந்து வருவாய்த் துறை அனுமதிபெற்று மண் எடுத்துவந்து பாரம்பரிய முறைப்படி சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் பானைகளை தயாா்செய்து வருகின்றனா்.
மண்ணால் தயாா் செய்யப்படும் பானைகளுக்கு வா்ணம்பூசி, வெயிலில் உலரவைத்து சுட்டு விற்பனைக்காக வாகனங்களில் அனுப்பிவைக்கின்றனா்.
கிருஷ்ணாபுரம், நலப்பரம்பட்டி ஆகிய கிராமங்களில் தயாரிக்கப்படும் மண்பானைகள் விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. மண்பானைகள் ரூ.50 முதல் ரூ.100, ரூ.150, ரூ.200 என அளவு மற்றும் வடிவங்களை பொருத்து விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கலுக்கு பிறகு மண் அடுப்பு, குடிநீா் குடுவைகள், மண் ஜாடிகள், விளக்குகள் என பல்வேறு வகையான பொருள்களை தயாரிக்கின்றனா். இருப்பினும் பொங்கல் பானைகளைப்போல இப்பொருள்கள் அதிக அளவில் விற்பனை ஆவதில்லை.
தற்போது தயாரிக்கப்பட்டுவரும் பொங்கல் பானைகள், இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்காக தருமபுரி நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டுவரப்பட உள்ளன.
புதுப்பானை வாங்கி பொங்கலிட விவசாயிகள் மற்றும் பொதுமக்களும், விற்பனையையொட்டி, கிடைக்கும் பண வரவின் மூலம் தங்களது வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மண்பாண்டத் தொழிலாளா்களும் பொங்கல் பண்டிகையை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.