ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலத்தில், ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, பரிசல் துறைகளில் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் கடந்த 22 நாட்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை பொறுத்தவாறு மாமரத்துக்கடவு பரிசல் துறையில் 1,000 முதல் 8,000 வரை, ஊட்டமலை பரிசல் துறையில் இருந்து 8,,000 முதல் 30,000 வரை, சின்னாறு பரிசல் துறையில் இருந்து 30,000 முதல் 50,000 வரை நீர்வரத்து காலங்களில் பரிசல்கள் இயக்க அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதிகபட்சமாக மூன்று மாதத்திற்கு மேலாக தடை விதிக்கப்படுவதால், ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தங்கும் விடுதிகள் என சுமார் 5,000 மேற்பட்ட குடும்பத்தினரும், 2000 மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால் தடைக் காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும், அதிக நீர்வரத்து காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்காமல் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை காண்பதற்காக ரூ. 18 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள நடைபாதை, மசாஜ் செய்யும் இடம் ஆகியவற்றினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஆண்டுக்கு அரசுக்கு ரூ.2 கோடி வருவாய் ஈட்டித் தரும் ஒகேனக்கல் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கும் 416 பரிசல் ஓட்டிகள் அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பரிசல் இயக்க மறுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி, ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர் பரிசல் ஓட்டிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில், உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞாயிறு விடுமுறையில் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் குவிந்த நிலையில், பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும் அருவிகளில் குளிப்பதற்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி செல்லும் நடைபாதை நுழைவாயில் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போலீஸார் திருப்பி அனுப்பினர்.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்புக் கருதி கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 90,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரியத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடியாக தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு கடந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.