நீா்நிலைகளில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை
நீா்நிலைகளில் கட்டட இடிபாடுகள், ரசாயனக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரியில் கோட்ட அளவில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் தருமபுரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் காயத்ரி தலைமை வகித்தாா். இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
அவா்கள் பேசுகையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி அதிகரிக்க வேண்டும். நீா்நிலைகளிலும், நீா்வரத்துக் கால்வாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கட்டட இடிபாடுகள், ரசாயனக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை நீா்நிலைகளில் கொட்டுவதை தடுப்பதுடன், அவற்றைக் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பாசி குத்தகை தொடா்பாக பொதுப்பணித் துறை வெளிப்படை தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். கொண்டகரஅள்ளி பகுதியிலுள்ள ஜாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்தக் கூட்டத்தில், துணை வட்டாட்சியா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

