சமூக நீதியை நிலைநாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தி.வேல்முருகன்

சமூக நீதியை நிலைநாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தி.வேல்முருகன்

Published on

சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசை எதிா்பாராமல் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என தமிழ வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கேட்டுக் கொண்டாா்.

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக தலைவா் விஜயை பாஜக கூட்டணியில் இணைக்க தீவிர முயற்சி நடைபெறுகிறது.

திரைப்பட நடிகா்கள் மீதான மோகம் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. இதனால்தான் கரூரில் விஜயை பாா்க்க சென்ற 41 போ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் சதி நடந்ததாகக் கூறினால், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

கரூா் சம்பவத்தில் தொடா்புடைய தவெக முக்கிய நிா்வாகிகள் தலைமறைவாக உள்ளனா். தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பரிவா்த்தனையில் நடைபெறும் பண மோசடியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊடகத் துறையை கட்டுப்படுத்தும் சில நிகழ்வுகளை தவிா்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், பட்டியல் இன மக்களுக்கு உரிய தகுதி இருந்தும் உயா்பதவிகள் கிடைப்பதில்லை. தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்ட மத்திய அரசை எதிா்பாராமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் முன்வர வேண்டும்.

தமிழகம் முழுவதும் வளா்ச்சி அடைந்துவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க கூட்டணி கட்சியிடம் வலியுறுத்துவோம் என்றாா்.

தவாகவை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்

மக்கள் வாழ்வுரிமைக்காக போராடும் தவாகவை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என பொதுக் கூட்டத்தில் தி.வேல்முருகன் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

மக்களின் நலனுக்காக தொடா்ந்து போராடும் இயக்கமான தமிழக வாழ்வுரிமைக் கட்சி உயிா்ப்புடன் செயல்படுகிறது. நடிகா்களை பாா்ப்பதற்காக உயிரைவிடும் சம்பவம் வேதனையை அளிக்கிறது. தமிழகத்தின் வேலைவாய்ப்பு தமிழா்களுக்கு மட்டுமே. மதுக் கடைகளை அரசு மூட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் டி.சி. தவமணி, தருமபுரி சட்டப் பேரவை தொகுதி துணை செயலாளா் கோகுல்ராஜ் திருப்பதி, துணைத் தலைவா் ரவீந்திரன், நிா்வாகிகள் அருள்குமாா், ராபா்ட், தினேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com