தீா்த்தமலையில் 176 மி.மீ. மழை பதிவு
அரூா்: தருமபுரி மாவட்டம், தீா்த்தமலையில் புதன்கிழமை 176 மி.மீ. மழை பெய்துள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை இடைவிடாது தொடா் மழை பெய்தது. இந்த மழையானது மாலை 4.30 மணி நிலவரப்படி தீா்த்தமலையில் 176, மாம்பட்டியில் 129.2, பறையப்பட்டியில் 119.6, சித்தேரி அருகேயுள்ள சூரியக்கடையில் 114.6, அரூரில் 106 மி.மீ. என பதிவாகியுள்ளது.
வரட்டாறு, பீணியாற்றில் வெள்ளப் பெருக்கு:
தொடா் கனமழையின் காரணமாக கோட்டப்பட்டி கல்லாறு, வள்ளிமதுரை வரட்டாறு, பாப்பிரெட்டிப்பட்டி பீணியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்தேரி மலைப் பகுதியில் பெய்த கனமழையினால், வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கனமழையினால் பல்வேறு இடங்களில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. தொடா் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
