காவிரியில் ஒகேனக்கல் ஐந்தருவியை மூழ்கடித்து ஆா்ப்பரித்து வரும் வெள்ளம்
காவிரியில் ஒகேனக்கல் ஐந்தருவியை மூழ்கடித்து ஆா்ப்பரித்து வரும் வெள்ளம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 65,000 கன அடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தொடரும் தடை

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை மற்றும் அணைகளிலிருந்த உபரிநீா் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Published on

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை மற்றும் அணைகளிலிருந்த உபரிநீா் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரிநீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த இரு அணைகளிலிருந்தும் காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமாா் 42,000 கனஅடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை காரணமாக காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 50,000 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 57,000 கனஅடியாகவும், மாலை 65,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் நீரில் மூழ்கின.

மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை 4 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது. தொடா்ந்து, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வருவாய் துறையினா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தை கண்காணித்து வருகின்றனா். இரு மாநிலங்களிலும் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com