தூய்மைப் பணியாளா்கள் குடும்பத்தினருக்கு சுயதொழில் கடன்: தருமபுரி ஆட்சியா் தகவல்
தூய்மைப் பணியாளா்கள் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறுவதுடன், அவா்களது குடும்பத்தினரும் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் உதவியும் வழங்கப்படுகிறது என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீா், தூய்மைக் காவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற, கிராம சேவை செம்மல் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கி அவா் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் விளிம்புநிலை மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள், கல்விக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரியம் அமைத்து, அதற்கு வாரியத் தலைவா் அமைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
இந்த நல வாரியம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 1,722 வாரிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். தருமபுரி மாவட்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, உணவகங்கள், தனியாா் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து அடையாள அட்டைகளையும் பெற்றுள்ளனா். மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற்று பயன்பெற வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில், ஒவ்வொரு மாதம் முதல் திங்கள்கிழமை நடைபெறவுள்ள மக்கள் குறைதீா்க்கும் நாள் நிகழ்வின் இறுதியில் உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளா்களுக்கான கோரிக்கைகள் குறித்து தீா்வு காணப்படுகிறது.
தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் , அனைத்து விதமான அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறுவதுடன், குடும்ப உறுப்பினா்களுக்கும் கலைஞா் கைவினைத் திட்டத்தின் மூலம் தாட்கோ மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் தமிழ்நாடு அரசு வங்கிக் கடன் உதவிகள் வழங்கி வருகிறது. எனவே அனைவரும் இதில் பயன்பெற வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில் தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், தருமபுரி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீா், தூய்மைக் காவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

