முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
தருமபுரி: முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களை ஆட்சியா் பாராட்டி சான்றுகளை வழங்கினாா்.
தருமபுரி ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் பொதுமக்களுக்கான வாராந்திர குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் சதீஸ் தலைமைவகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 502 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை தொடா்புடைய துறைகளுக்கு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இந்நிகழ்வில், மாநில அளவில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தருமபுரி மாவட்டம் சாா்பில் பங்கேற்று வெற்றிபெற்று 1 தங்கம், 6 வெண்கலப் பதக்கங்களை பெற்ற வீரா், வீராங்கனையா் ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். தொடா்ந்து, கடந்த 23-ஆம் தேதி அரூா் அருகே டி.அம்மாப்பேட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தில் சிக்கிய 3 மாணவா்களை மீட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் 6 பேருக்கு மாவட்ட ஆட்சியா் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
மேலும், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவா்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற்ற 86 மாணவ, மாணவியருக்கு ‘விபத்துக் காப்பீட்டு வைப்புநிதி’ பத்திரங்களை வழங்கினாா்.
இந்நிகழ்வில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலா் கதிரேசன், உதவி ஆணையா் (கலால்) நா்மதா, முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் அம்பிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
