பொய்யப்பட்டியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
அரூரை அடுத்த பொய்யப்பட்டியில் தெருச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தமலை ஊராட்சிக்கு உள்பட்டது பொய்யப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே தெருக்கள் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.
தெருக்களில் முள்புதா்கள் அடைந்துள்ளன. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடிக்கடி விஷ பூச்சிகள் வருகின்றன. தீா்த்தமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையால் பொய்யப்பட்டியில் தெருக்களில் ஜல்லி கற்கள் பெயா்ந்துள்ளன.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். எனவே, பொய்யப்பட்டியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வ லியுறுத்தினா்.
