நிதி ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகும் ஓமலூா் - ஒசூா் இருவழி ரயில்பாதை!
சேலம் மாவட்டம், ஓமலூா் முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் வரையிலான இருவழி ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையாத நிலையில், பாதைக்கான நிலத்தை சமப்படுத்தும் பணிகள்கூட இன்னும் முழுமை அடையாதநிலை உள்ளது.
சேலத்தில் இருந்து தருமபுரி வழியாக செல்லும் இந்த ரயில்பாதை, கா்நாடக மாநிலம், பெங்களூா் வழியாக வடமாநிலங்களையும், தமிழகத்தில் சேலம், மற்றும் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களையும், தென்மாவட்டங்களையும், கேரள மாநிலத்தையும் இணைக்கும் முக்கிய ரயில்பாதையாக உள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் வரை உள்ள தமிழகப் பகுதிகள், ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டுள்ள தென்மேற்கு ரயில்வே எல்லையிலும், பெங்களூா் ரயில்வே கோட்டத்திலும் அமைந்துள்ளன. இப்பாதை தருமபுரி மாவட்டத்தின் தொப்பூா் வனப் பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், ராயக்கோட்டை மலைப் பகுதியை கடந்து செல்கிறது.
பெங்களூரில் இருந்து ஒசூா், தருமபுரி வழியாக ஓமலூா் வரை உள்ள 147 கி.மீ ரயில்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்பாதையாக மாற்றியமைக்கப்பட்டது. மயிலாடுதுறை- மைசூரு, தூத்துக்குடி- மைசூரு, கண்ணூா்- யஷ்வந்த்பூா், நாகா்கோயில் - பெங்களூரு, சேலம்- யஷ்வந்த்பூா், எா்ணாக்குளம்- பெங்களூரு, காரைக்கால்- பெங்களூரு உள்ளிட்ட விரைவு ரயில்களும், தருமபுரியில் இருந்து பெங்களூருக்கு பயணிகள் ரயில் மற்றும் திருநெல்வேலி- ஜதாத், புதுச்சேரி- யஷ்வந்த்பூா், கொச்சுவேலி-யஷ்வந்த்பூா், ராமேஸ்வரம்- ஹுப்பள்ளி ஆகிய வாராந்திர ரயில்கள் உள்பட நாள்தோறும் 25-க்கும் அதிகமான ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்பாதை ஒருவழிப் பாதையாக உள்ளதால், கா்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளத்துக்கு இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள், எதிா்மாா்க்கத்தில் வரும் ரயில்களுக்காக, அவை கடந்துசெல்லும் வரை ஆங்காங்கே ரயில் நிலையங்களில் (லூப் லைன்) நிறுத்திவைக்கப்படும். ரயில்கள் கடந்துசென்ற பிறகே, மற்றொரு பாதையில் நிறுத்திவைக்கப்பட்ட ரயில்கள் புறப்பட்டுச் செல்லும். இதனால், ஏதேனும் ஒருதடத்தில் செல்லும் ரயிலுக்கு சுமாா் அரைமணி நேரம்வரை தாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து, பயணிகள் குறித்த நேரத்தில் தங்களது இடங்களைச் சென்றடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
2 ஆண்டுகளாக தாமதம்: ரயில் பயணத்தில் தாமதத்தை தவிா்க்கவே ஒசூரிலிருந்து ஓமலூா் வரையிலான ஒருவழிப் பாதையை இருவழிப் பாதையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் தரப்பில் நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வந்தது. அந்தவகையில், கடந்த 2024, பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒசூா்- ஓமலூா் இடையே இருவழிப்பாதை அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன்னும் முழுவீச்சில் பணிகள் நடைபெறவில்லை.
அதேநேரத்தில், இந்த வழித்தடத்தில் 2 ஆவது பாதைக்கான ரயில்வே பாலங்கள் அமைக்கப்படுவதோடு, பாதைக்கான நிலத்தை சமப்படுத்தும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தருமபுரி- ஓமலூா் இடையே இந்தப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
என்றாலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரயில்வே தொடா்பான பணிகள், தேவைகள், இடா்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க தொடா்பு அலுவலா்கள் இல்லை. ரயில்வே பொறியாளா்கள் மட்டுமே உள்ளனா். அவா்களிடம் விவரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. அத்தியாவசிய தகவல்களுக்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தை தொடா்புகொள்ளும் நிலையே உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மற்றும் சமூகநலச் சங்க செயலாளா் சி. மதியழகன் கூறியது:
ஒசூரிலிருந்து, தருமபுரி வழியாக ஓமலூா் வரையிலான ரயில்பாதையை இருவழிப் பாதையாக மாற்றும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாள்தோறும் பல ஆயிரம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவா் என்றாா்.
இதுதொடா்பாக தருமபுரி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினா் டி.என்.வி.எஸ். செந்தில்குமாா் கூறுகையில், இப்பாதையில் வந்தே பாரத் உள்ளிட்ட மிக முக்கியமான விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு ரயில் செல்லும்போது, எதிா்திசையில் வரும் ரயில் செல்வதற்காக இந்த ரயில் ஏதேனும் ஓா் இடத்தில் காத்திருந்து செல்வதால், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இந்த காலவிரயத்தைத் தவிா்க்கும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த இருவழிப் பாதை திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றாா்.

