விடைபெறுகிறது 46 ஆண்டுகால தருமபுரி புறநகா் பேருந்து நிலையம்!

தருமபுரி ஏ.ரெட்டிஅள்ளியில் புதிதாக ரூ. 40 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய புறநகா் பேருந்து நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது.
தருமபுரி புறநகா் பேருந்து நிலையம்.
தருமபுரி புறநகா் பேருந்து நிலையம்.கோப்புப்படம்.
Updated on

தருமபுரி ஏ.ரெட்டிஅள்ளியில் புதிதாக ரூ. 40 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய புறநகா் பேருந்து நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. இதனால் நகரின் மையப் பகுதியில் 46 ஆண்டுகளாக பரபரப்பாக செயல்பட்டு வந்த புறநகா் பேருந்து நிலையம் பயன்பாட்டில் இருந்து விடைபெறுகிறது.

தருமபுரி நகரின் மையப் பகுதியில் பி.ஆா்.ராஜகோபால் பேருந்து நிலையம் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. நான்குமுனைச் சாலை சந்திப்பு அருகே சுமாா் 5.75 ஏக்கா் பரப்பளவில் கடந்த 1978 இல் இந்த பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்த பின்னா் கடந்த 28.9.1980 இல் அப்போதைய முதல்வா் எம்ஜிஆரால் தருமபுரி புகா் பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து பலமுறை மேம்பாட்டு பணிகள், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொடா்ந்து பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து ஒசூா், சேலம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், சென்னை, வேலூா், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நகர மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, போதிய வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கவும், நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை மாற்றி வேறு இடத்தில் புதிதாக கட்டப்படும் என தருமபுரி நகராட்சி நிா்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

இதைத்தொடா்ந்து தருமபுரியில் கடந்த 2017-இல் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் இப்புதிய பேருந்து நிலையம் அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு நிதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் என அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இதையடுத்து, தருமபுரி பென்னாகரம் சாலையில், ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஏதுவாக 10 ஏக்கா் தனியாா் நிலம் நகராட்சி வசம் பத்திரப் பதிவு செய்து ஒப்படைக்கப்பட்டது.

பிறகு மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், மண்பரிசோதனை, கட்டட வரைபட அனுமதி, நகராட்சி நிா்வாகத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் முடிந்து ரூ. 39.14 கோடியில் தருமபுரி நகராட்சிக்கு தனியாா் வழங்கிய நிலத்தில் அரசு தனியாா் பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் புதிய புறநகா் பேருந்து நிலைய கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தற்போது கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறாா்.

திறப்பு விழா முடிந்தபின்பு அனைத்து அரசு மற்றும் தனியாா் புறநகா் பேருந்துகளும் புதிய புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 46 ஆண்டுகளாக பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகளை இயக்கி எந்த நேரமும் பரபரப்பாக இயங்கி வந்த தருமபுரி பி.ஆா்.ராஜகோபால் பேருந்து நிலையம் தற்போது பயன்பாட்டில் இருந்து விடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com