

தருமபுரி: அரூா், திருவண்ணாமலை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இயக்கப்பட்டது.
தருமபுரி புறநகா்ப் பேருந்து நிலையம், அரசு தனியாா் பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.39.14 கோடியில் சோகத்தூா் ஊராட்சி, ஏ.ரெட்டிஅள்ளியில் சேலம், பென்னாகரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் புதியதாக கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்.5-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்காக தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அன்றைய தினமே அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. நகரில் முறையான சாலை விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தருமபுரி நகர சாலைகள் இணைக்கும் வகையில் சாலை வடிவமைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் இந்த மாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதில் தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு போக்குவரத்து நெரிசலில் சிக்கத் தவித்தது. இதனால் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். அதேவேளையில் தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு, திருப்பத்தூா் சாலை என நகரின் முக்கியச் சாலைகள் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் அதேவழித்தடத்தில் புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த வழித்தட மாற்றத்தால், தேவையின்றி அரூா், மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்று மீண்டும் தருமபுரி நகருக்குள் வந்து செல்ல வேண்டி இருந்தது. இனால் இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய மக்கள் தேவையின்றி பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனா்.
இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல், மக்களின் சிரமங்களை களைய, நகருக்குள் வந்து செல்லும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை வழித்தட பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள், வணிகா்கள், அரசியல் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து ஆய்வுக் கூட்டம் மேற்கொண்ட தருமபுரி மாவட்ட நிா்வாகம், அரூா் வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் அனைத்தும் மீண்டும் பிப்.9-ஆம் தேதி முதல் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இந்த பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. இந்த மாற்றத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.