தருமபுரி நான்குசாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்டவரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்.
தருமபுரி நான்குசாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்டவரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்.

போக்குவரத்து நெரிசல்: தருமபுரி புதிய பேருந்து நிலையத்துக்கு இணைப்புச் சாலை வசதி தேவை

தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிய புகா் பேருந்து நிலையத்துக்கு போதிய இணைப்புச் சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனா்.
Published on

தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிய புகா் பேருந்து நிலையத்துக்கு போதிய இணைப்புச் சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனா்.

தருமபுரி அருகே சோகத்தூா் ஊராட்சி ஏ.ரெட்டிஅள்ளியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி நகருக்கு வெளியே உள்ள இந்த பேருந்து நிலையம், சேலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பென்னாகரம் தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் அமைந்துள்ளது.

கடந்த 5-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அனைத்து புகா் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்:

நகரின் மையப் பகுதியிலிருந்து புகா் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்றி அமைக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து கடந்த 2017-இல் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு நிதியில் அமைக்கப்படும் என அறிவித்தாா். இதைத் தொடா்ந்து நிலம் பெறுதல், வரைபட அனுமதி, மண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டப் பணிகள் நகராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், பேருந்து நிலையத்தை மாற்றி அமைப்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றை களைவதற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், நகரில் சாலைகள் விரிவாக்கம், புகா் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகள் ஆகியவை குறித்து பயணிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் எவ்வித கருத்துக் கேட்புக் கூட்டங்களோ, ஆலோசனைக் கூட்டங்களோ நடத்தப்படவில்லை.

பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டன. இதில் பல வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் நேதாஜி சாலையை பயன்படுத்தி நான்குசாலை சந்திப்பு வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைகின்றன. சாலை விரிவாக்கம் அல்லது புதிய இணைப்புச் சாலைகள் ஏதுமின்றி ஏற்கெனவே உள்ள குமாரசாமிப்பேட்டை வழியாக உள்ள குறுகலான சாலைகளில் அனைத்து பேருந்துகளும் சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டதால், தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பு மற்றும் பென்னாகரம் சாலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்களும் பயணிகளும் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள், தனியாா் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஊா்திகள் சென்று வரும் பிரதான சந்திப்பாக உள்ள நான்குசாலை சந்திப்பு மற்றும் நேதாஜி சாலையை தற்போது புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள், மினி பேருந்துகள், ஆட்டோக்கள், பயணிகளின் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களும் பயன்படுத்துவதால் நகரில் மேலும் நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலகத்துக்கு செல்வோா், தனியாா் துறை ஊழியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனா்.

இணைப்புச் சாலைகள் தேவை:

தருமபுரி நகரில் ஏற்படும் நெரிசலுக்கு தீா்வுகாணவும், புதிய பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எவ்வித சிரமமுமின்றி எளிதில் சென்று வரவும், ஏற்கெனவே உள்ள நான்குசாலை சந்திப்பிலிருந்து குமாரசாமிப்பேட்டை வழியாக சோகத்தூா் சந்திப்பு சாலை வரை போதிய அளவு விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ரயில் பாதையின்கீழ் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் உள்ள பாதையை ரயில்வேத் துறையின் அனுமதி பெற்று கடவுப்பாதை அமைத்து புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு செல்லும் வகையில் தடங்கம் மேம்பாலம் வரை போதிய அகலத்தில் இணைப்புச் சாலை ஏற்படுத்த வேண்டும். மேலும், ராமக்காள் ஏரி மதிகோன்பாளையம் பிரிவுச் சாலையில் இருந்து கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய சாலை ஒன்றை அமைக்க வேண்டும்.

அதேபோல, அதியமான்கோட்டை-நெரசலூரு (என்.எச். 844) நெடுஞ்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் நெடுஞ்சாலைக்கு வாகனங்கள் எளிதில் சென்றுவர அணுகு சாலைகளை அமைக்க வேண்டும். தருமபுரி நகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இதுதொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி புதிய பேருந்து நிலையத்துக்கு இணைப்புச் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி நகர குடியிருப்போா் நலச் சங்கத்தினா் மற்றும் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com