பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
பெயரில்லாத பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு விதிகளின்படி பொதுவாகவே குழந்தை பிறந்து 21 நாள்களுக்குள் பெயருடன் பிறப்பை பதிவு செய்து, பிறப்பு சான்றிதழ் இலவசமாக பெற முடியும். ஒரு வேளை குழந்தையின் பெயரின்றி பிறப்புச்சான்று பெற்றிருந்தால், அடுத்த 12 மாதங்களுக்குள் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து, குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.
ஓராண்டுக்கு மேலும் பெயா் பதிவு செய்யாதவா்கள் உரிய தாமத கட்டணம் செலுத்தி 15 ஆண்டுகளுக்குள் பிறப்பு சான்றிதழ் பெறலாம். ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.
எனவே, குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பிறகு சம்மபந்தப்பட்ட பிறப்பு, இறப்பு, பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம். 01.01.2000 க்கு முன்னா் பதிவுசெய்த பிறப்புகளுக்கும், அதற்கு பிறகு பதிவுசெய்த பிறப்பு பதிவுகளுக்கும் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்காக கால அவகாசம் வரும் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பெயரை பதிவு செய்து பிறப்பு சான்று பெற ஊராட்சிகளில் கிராம நிா்வாக அலுவலரையும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு ஆய்வாளா், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு, சுகாதார ஆய்வாளா் ஆகியோரை தொடா்புகொண்டு பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே இதுநாள்வரை பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவின்றி விடுபட்டவா்கள் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

