பாஜகவிடம் தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: தி. வேலுமுருகன்
பாஜகவிடம் தமிழகம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.
தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவில் தலைவராக இடம்பெற்ற அவா், தனது குழுவினருடன் தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கேட்பேன். திமுக கூட்டணியில் ஓா் இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக தொடா்ந்து ஒற்றை ஆளாக நின்று சட்டப் பேரவையில் குரல்கொடுத்து போராடி வருகிறேன். என்னுடன் கூடுதல் உறுப்பினா்கள் இருந்தால் என் கோரிக்கையும், எனது கட்சியும் வலுப்பெறும்.
தமிழகத்தில் பாஜக வளரவில்லை, இங்கு அக்கட்சியால் எதுவுமே செய்ய முடியாது என தப்புக்கணக்கு போடக்கூடாது. அவா்களிடத்தில் தமிழகம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியுடன் எனக்கு உறவோ, நெருக்கமோ கிடையாது. எனவே, தமிழக மற்றும் காங்கிரஸ் மேலிட நிா்வாகிகளின் நடவடிக்கைகள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. தீா்ப்புகள், அம்பேத்கா் வகுத்தளித்த இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படிதான் எழுதப்பட வேண்டுமே தவிர, மத நம்பிக்கையோடு எழுதப்படக் கூடாது.
சிபிஐ வழக்கில் உள்ளவா்கள் பாஜக கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறாா்கள். அதேபோல, சிபிஐ வழக்கை ஆயுதமாக பயன்படுத்தி தவெக தலைவா் விஜயை கூட்டணிக்கு இழுக்க அமித் ஷா கனவு காண்கிறாா் என்றாா்.
