பனை தொழிலாளா்கள் கைது: 
காவல் நிலையம் முன் போராட்டம்

பனை தொழிலாளா்கள் கைது: காவல் நிலையம் முன் போராட்டம்

Published on

பனை தொழிலாளா்களை கைது செய்ததைக் கண்டித்து, காரிமங்கலம் காவல் நிலையம் முன் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே ஏ.சப்பாணிப்பட்டியில் கடந்த ஜன. 4-ஆம் தேதி பனை தொழிலாளா்கள் ‘கள் பொங்கல் திருவிழாவை’ நடத்தினா்.

இது தொடா்பாக காரிமங்கலம் போலீஸாா், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பனை தொழிலாளா்களான சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது ஆகிய 4 போ்மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்தனா்.

இதைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான பனை தொழிலாளா்கள், விவசாயிகள் காரிமங்கலம் காவல் நிலையத்துக்கு திரண்டுவந்து, கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வேண்டும். கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

தகவல் அறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா சுந்தா் மற்றும் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், தமிழகத்தில் கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்க இயலாது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் முறையிடுமாறு காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதில், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவா்களில் சுரேஷ்மீது மட்டும் ஏற்கெனவே இருந்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். மற்று மூவரும் விடுவிக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com