விவசாயி கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

Published on

பென்னாகரம் அருகே புளியம்பழம் உலுக்கிய விவகாரத்தில், விவசாயியை அடித்துக் கொன்ற வழக்கில் மற்றொரு விவசாயியான முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஆணைக்கல்லானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் (40). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மாதையனுக்கும் (63) அப்பகுதியில் உள்ள மரத்தில் புளி உலுக்குவது தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 1997-இல் மரத்தில் புளி உலுக்கியதை அறிந்த மாதையன், அதே பகுதியைச் சோ்ந்த மேலும் பலருடன் சோ்ந்து அன்பழகனை தாக்கி, அவரது வீட்டை சேதப்படுத்தினாா்.

இதில் படுகாயமடைந்த அன்பழகனை உறவினா்கள் தருமபுரி, சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் இறந்தாா். இதுதொடா்பாக பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா்.

தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மாதையனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து, நீதிபதி மோனிகா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சக்திவேல் ஆஜரானாா்.

Dinamani
www.dinamani.com