பென்னாகரத்தில் அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா

பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு எம்எல்ஏ ஜி.கே. மணி தலைமை வகித்தாா். வண்ண கோலமிட்டு, மண்பானையில் பொங்கலிட்டு, உழவா்கள், கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளுக்கு பொங்கல், இனிப்புகள் வழங்கப்பட்டு பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பேரூராட்சி அலுவலகம்:

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றத் தலைவா் வீரமணி, செயல் அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், அனைத்து கட்சி வாா்டு உறுப்பினா்கள், பேரூராட்சி பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், மகளிா் குழுவினா் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல சின்னபள்ளத்தூா் பகுதியில் கிராமத்து பொங்கல் விழாவும், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம், பெரும்பாலை ஆரம்ப சுகாதார நிலையம், நாகதாசம்பட்டி சுகாதார நிலையம், குழிப்பட்டி அரசுப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Dinamani
www.dinamani.com