பொங்கல் பண்டிகை வியாபாரத்துக்காக கரும்பு, மஞ்சள் வியாபாரிகள் காத்திருக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர், அகரம், காவேரிப்பட்டணம், வேப்பனஅள்ளி, பர்கூர், குந்தாரப்பள்ளி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது.
விலை ஏற்றம், மண் பானையில் பொங்கலிடும் வழக்கம் குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண் பானை தயாரிக்கும் தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
களிமண், மணல் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து, தண்ணீர் ஊற்றி பதப்படுத்திய களிமண்ணைக் கொண்டு சக்கரத்தின் மூலம் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.
பின்னர், தட்டுப் பலகையின் மூலம் பானைகள் தட்டப்பட்டு, அவற்றுக்கு அதற்கு வர்ணம் பூசிய பிறகு வெயிலில் உலர வைக்கப்படுகின்றன. பின்னர், அவற்றை சூளையில் அடுக்கி விறகு, வைக்கோல் ஆகியவற்றின் மூலம் தீயிட்டு வேக வைத்து, அதன்பிறகு வியாபாரத்துக்காக சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.
மண் பானைத் தொழிலின் இன்றைய நிலை குறித்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வேணுகோபால் (60) கூறியது:
தைப் பொங்கலுக்காக பொதுமக்களின் தேவையறிந்து மண் பாண்டங்கள் தயாரிப்பில் குடும்பத்துடன் ஈடுபடுவோம்.
கடந்த சில ஆண்டுகளாக நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகளை பயன்படுத்தவது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதனால், வியாபாரம் குறைந்து விட்டதால், குறிப்பிட்ட சில நாள்கள் வேலை செய்து பானைகளைத் தயாரிக்கிறோம்.
மற்ற நேரங்களில் கூலி வேலைக்கு வெளியே செல்கிறோம்.
நிகழாண்டில் குறிப்பிட்ட நாளில் பணியைத் தொடங்கினாலும், வியாபாரம் மந்தமாகவே உள்ளது. களிமண், மணல் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. அரசின் கெடுபிடியால் ஏரியிலிருந்து களிமண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சூளைக்கான வைக்கோல், விறகு ஆகியவற்றின் விலை, டிராக்டர் வாடகை அதிகரித்த போதிலும், தயாரிப்புச் செலவுடன் குறைந்த லாபம் வைத்து மண்பானைகளை விற்கிறோம். தற்போது இந்தத் தொழிலில் இளைய தலைமுறையினர் ஈடுபடுவது இல்லை. அவர்கள் திருப்பூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர்.
இதனால், இந்தத் தொழிலில் ஈடுபட தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ரூ.80 முதல் ரூ.100 வரை அடுப்பு, ரூ.70 முதல் ரூ.200 வரை மண் பானை, ரூ.50 விலையில் மண் சட்டி விற்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள மண் பானைகள் பொங்கல் தினத்துக்குள் விற்பனையாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பொதுமக்கள் பெரும்பான்மையோர் அலுமினியம், பித்தளைப் பாத்திரத்தில் பொங்கலிடும் நிலைக்கு மாறிவிட்டனர்.
ஆண்டில் ஒரு நாளாவது மக்கள் பழங்கால முறைப்படி மண் பாண்டத்தில் பொங்கலிடும் வழக்கம் மங்கி வருவதும் இந்தத் தொழில் முடங்கிப் போனதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.