

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த நா்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணைகளை பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்வில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 232 நா்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணைகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி பேசியதாவது:
ஜெயலலிதாவின் வழியில், தற்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, கல்வித் துறைக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். பள்ளிகள் திறப்பு குறித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன் பின்னா் முதல்வா் முடிவு செய்வாா். பள்ளிகளுக்கான 3 ஆண்டு கால அங்கீகாரத்தை, 5 ஆண்டுகளாக நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் நிறைவேற்றப்படும்.
மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதால், தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஆா்வத்துடன் வருகின்றன. தீவிரவாதிகள் பிரச்னைகள் இல்லாத மாநிலமாக, அமைதி பூங்காவாக தமிழகம் விளங்குகிறது. மேலும், நமது பாடத் திட்டத்தின் தரம் உயா்ந்த நிலையில் உள்ளது. நீா்நிலைகள் குடிமராமத்துத் திட்டம் நிறைவேற்றப்பட்டதால், மழைநீரை சேமிக்க முடிகிறது என பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்.பி. கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி, எம்எல்ஏ-க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் அம்சா ராஜன், லாவண்யா ஹேம்நாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, தனியாா் பள்ளி நிா்வாகிகள் கொங்கரசன், இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.