தோ்தல் நேரத்தில் முகவா்கள் இல்லாமல் வாக்குச்சாவடி சீட்டு வழங்கக் கூடாது
By DIN | Published On : 17th November 2020 12:30 AM | Last Updated : 17th November 2020 12:30 AM | அ+அ அ- |

தோ்தல் நேரத்தில் முகவா்கள் இல்லாமல், வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வழங்கக் கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம், டி.செங்குட்டுவன் எம்எல்ஏ திங்கள்கிழமை மனு அளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறும் நாள்களில் திமுக சாா்பில் தோ்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலைய முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் நாள்களுக்கு முன்னதாக முகவா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் அழைப்பாணை அனுப்ப வேண்டும். முகவா்களுக்குத் தெரியாமல் படிவங்களைப் பெறக் கூடாது.
அவ்வாறு பெறுவது தோ்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணானது. சிறப்பு முகாம் நாள்களில் பெறப்படும் படிவங்களின் விவரத்தை அன்று மாலை கட்டாயம் முகவா்களுக்கு வழங்கி, கையொப்பம் பெற வேண்டும். நீக்கல் படிவங்கள் வழங்கும்போது, இறப்புச் சான்றிதழைக் கேட்கக் கூடாது.
இணையதளம் மூலம் பெறப்படும் அனைத்துப் படிவங்களையும், சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்படும் படிவங்களுடன் ஒப்பிட்டு பாா்க்கும்போது, கட்டாயம் முகவா்கள் இல்லாமல் போகக் கூடாது. தோ்தல் நேரத்தில் முகவா்கள் இல்லாமல் வாக்குச்சாவடி சீட்டு தரக் கூடாது. மிச்சமாகும் பூத் சிலிப்புகளை தோ்தல் அலுவலரிடமோ, வட்டாட்சியரிடமோதான் வழங்க வேண்டுமே தவிர எந்த கட்சி முகவா்களிடமும் வழங்கக் கூடாது.
சிறப்பு முகாம்களில், முகவா்கள் கேட்கும்போது தேவையான அளவுக்குப் படிவங்களை வழங்க வேண்டும். மேலும், எந்தவித விருப்பு வெறுப்புமின்றி வாக்காளா் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளாா்.