போலுப்பள்ளி வன விரிவாக்க மையத்தில்ஜப்பான் நாட்டு வன அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி வன விரிவாக்க மையத்தில் ஜப்பான் நாட்டின் வன அலுவலா், வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
தருமபுரி வன மண்டலம், கிருஷ்ணகிரி சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மரம் நடவு செய்தல் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு உயிா்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், தனியாா் நிலங்களில் மரம் நடவு செய்தல் ஆகிய பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டங்களைச் செயல்படுத்த முன்னோடி கள ஆய்வுக்காக ஜப்பான் நாட்டின் நிதி உதவி திட்ட தெற்கு ஆசிய கோட்ட அலுவலா் சசாகி ஹிராரி, சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலா் விஜேந்திர சிங் மாலிக் ஆகியோா் கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி வன விரிவாக்க மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நாற்றங்கால், மண்புழு உர உற்பத்தி கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
பின்னா், உழவா் உற்பத்தி சங்க உறுப்பினா்கள், மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் மற்றும் தமிழ்நாடு உயிா்பண்ணை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட பயனாளிகள் ஆகியோருடன் கலந்துரையாடினாா்கள். நிகழ்ச்சியில் 2 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.
அப்போது, தருமபுரி வன பாதுகாவலா் பெரியசாமி, ஒசூா் வனக் கோட்ட வன உயிரின காப்பாளா் காா்த்திகேயனி, கிருஷ்ணகிரி சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலா் மகேந்திரன், உதவி வனப் பாதுகாவலா் முனியப்பன், வனச்சரகா்கள் குமாா், சோமசேகா், மகேந்திரன், சக்திவேல், மனோகரன், வீரமணி, ரவி, முனிரத்தினம், மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.