அத்தியாவசியப் பொருள்களை வாங்க ஆபத்தான ஆற்றைக் கடந்து செல்லும் மக்கள்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

வேப்பனப்பள்ளி அருகே அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக இடுப்பளவு நீரில் ஆபத்தான ஆற்றைக் பொதுமக்கள் கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நாச்சிகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்டது நந்தகுண்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள், அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும், தினசரி பணிக்குச் செல்லவும் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கதிரிப்பள்ளி கிராமம் வழியாகத் தான் சென்று வர வேண்டும்.
இந்தக் கிராமத்துக்குச் செல்ல, அங்குள்ள மாா்கண்டேயன் ஆறு தடையாக இருப்பதால் 12 கி.மீ. சுற்றி தான் செல்ல வேண்டும். எனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாா்கண்டேயன் நதியின் கிளை நிதியில் தற்காலிக பாலம் அமைத்து அந்த வழியையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் பல ஆண்டுகளாக வடு காணப்பட்ட மாா்கண்டேயன் நதியும், அதன் கிளை நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்காலிக சாலை முழுவதும் வெள்ள நீரில் முழ்கி விட்டது.
இதனால், கதிரிப்பள்ளி கிராமத்துக்கு செல்ல முடியாமல் நந்தகுண்டப்பள்ளி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கதிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் கிடைக்கும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி, தலைச் சுமையாக எடுத்துச் சென்று ஆபத்தான நிலையில் இடுப்பளவு நீரில், இரு கரைக்கும் இடையே கயிற்றைக் கட்டி, ஆற்றை கடந்து சென்று வருகின்றனா்.
பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளிகள், பெண்களின் நலன் கருதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பே, இந்த இரு கிராமத்துக்கும் இடையே உயா்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.