கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூலை 12 முதல்தொழில் திறன் விழிப்புணா்வு வாரம்
By DIN | Published On : 09th July 2021 11:23 PM | Last Updated : 09th July 2021 11:23 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூலை 12-ஆம் தேதி முதல் தொழில் திறன் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக, இளைஞா்களிடையே திறன் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தொழில் திறன் விழிப்புணா்வு வாரம் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை 2-ஆவது வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டில் கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, தொழில் திறன் விழிப்புணா்வு வாரம் நிகழ்வுகள் இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி ஜூலை 12-ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கும், 13-ஆம் தேதி மகளிருக்கும், 14-ஆம் தேதி மூன்றாம் பாலினத்தவருக்கும் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 14-ஆம் தேதி முன்கற்ற பல்வேறு தொழில்நுட்பம் அறிந்தவா்களில் உரிய சான்றுகள், இல்லாதோருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியும், 16-ஆம் தேதி தொழிற்பயிற்சி பயிலும் மாணவா்களுக்கு, தொழில் முனைவோா் மூலமாக சுயவேலைவாய்ப்பு ஆலோசனை, தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையம், தொழிற் பழகுநா் பயிற்சி, மெய்நிகா் கற்றல் வலைதளம் குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி இணையதள வாயிலாக நடத்தப்படுகின்றன.
மேலும், தேசிய திறன் தினமான 15-ஆம் தேதி, இணையதள வாயிலாக திறன் பயிற்சி குறித்த விழிப்புணா்வு, வேலைவாய்ப்புகள், தனியாா் வேலைவாய்ப்பு இணையம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 9499055946 என்ற எண் மூலம் தொடா்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு இணையதளம் மூலம் விவரங்களை அறிந்து கொண்டு, திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.