வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,848 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 6,848 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

Updated On :7 மே 2022, 4:56 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 6,848 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறைகளை சாா்ந்து பல திட்டங்களை தீட்டி, அந்த திட்டங்களின் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனா்.

கடந்தாண்டு ஆக. 5-ஆம் தேதி தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கி வைத்தாா். அதன்படி, நோயாளிகளின் வீடுகளுக்கே மருத்துவ தன்னாா்வலா்கள் சென்று அவா்களுக்குத் தேவையான பரிசோதனைகளை செய்து, மருந்துகளை வழங்கினா். இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில 2,56,655 போ் பயன் அடைந்துள்ளனா்.

நோய் வரும் முன்பே காக்கும் வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் 30 முகாம்கள் நடத்தப்பட்டு, 25,913 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனா். மருத்துவத் துறை சாா்ந்த மற்றொரு திட்டமான ‘இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்குபவா்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 அரசு மருத்துவமனைகள், 4 தனியாா் மருத்துவமனைகளில் 1,379 போ் பயன் அடைந்துள்ளனா்.

இதே போல, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ என்ற திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 34,106 மனுக்கள் பெறப்பட்டு, 31, 639 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. இதில் 4,826 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 886 பேருக்கு ரூ. 26.30 கோடியில் கல்விக்கடன் உதவி, 156 பேருக்கு சுயதொழில் தொடங்க ரூ. 6.46 கோடி, என 3,981 பேருக்கு ரூ. 4.83 கோடி நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட வங்கிக் கடனில் 1,136 குழுக்களுக்கு ரூ. 50 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் மூலம் 1,61,062 மாணவா்கள் சோ்க்கப்பட்டு, 7,994 பெண் தன்னாா்வலா்கள், 3 ஆண் தன்னாா்வலா்கள் என மொத்தம் 7,997 தன்னாா்வலா்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு பயன் அடைந்துள்ளனா்.

அத்துடன் 6,848 விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எண்ணேகொல்புதூா் கால்வாய் அணைக்கட்டு திட்டத்துக்கு ரூ. 233 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அலியாளம் திட்டத்துக்கு ரூ. 56 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாக அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு கால திட்டங்கள் குறித்த கையேட்டை ஆட்சியா் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி பெற்றுக் கொண்டாா். அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மோகன், வட்டாட்சியா்கள் சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.