எங்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு தார்மீக உரிமை இல்லை: கே.பி.முனுசாமி 

எங்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கே.பி. முனுசாமி.
வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கே.பி. முனுசாமி.

எங்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி, தலைமை வகித்து,  இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அளித்தார். இந்தநிகழ்வில் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே. அசோக் குமார்  எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், கேபி முனுசாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ஜெயலலிதா  மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருகிறது. நேற்று எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஓ பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைவரையும் வாருங்கள், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்ற தோரணையில் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.  

பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கு முன்பே,  ஓ பன்னீர்செல்வம், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிவிட்டார். நீதிமன்றத்துக்குச் சென்றார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கட்சியின் நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவெடுக்க முடியாமல், நீதிமன்றத்துக்கு சென்று, மூன்றாவது மனிதனை போலவும் மற்ற கட்சி நிர்வாகிகளை எதிரிகளை போல பாவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  அதைத்தொடர்ந்து பொதுக்குழு நடக்கக் கூடாது என்பதற்காக கலவரம் ஏற்படும் எனக் கூறி காவல்துறையில் மனு அளித்தார்.  பொதுக்குழு நடக்கக் கூடாது என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்.  ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொது குழுவிற்கு வராமல் தலைமைக் கழகத்திற்கு செல்கிறார். தலைமைக் கழகத்திற்கு சென்ற அவர்,  தன்னுடன் தொண்டர்களை அழைத்து சென்று இருந்தால், அங்கு சிறு மாசு ஏற்படாத வகையில் பாதுகாத்து இருப்பார்கள். ஆனால் அவர் ரௌடிகளை அழைத்துச் சென்று கலவரத்தில் ஈடுபட்டார். ஓ பன்னீர்செல்வம், உண்மையாகவே கட்சியின் விசுவாசியாக இருந்திருந்தால் இந்த தவற்றை செய்யாமல் இருந்திருப்பார். 

இப்படிப்பட்ட ஒரு நபர் ஏதோ ஒரு காரணத்திற்காக எங்களை அழைக்கிறார். எனவே, அவர் எங்களை அழைப்பதற்கு தார்மீக உரிமையை இழக்கிறார் என நான் கூறுகிறேன். இந்த இயக்கத்தில் இருப்பதற்கே எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபராக இருக்கிறார். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்வதற்கு கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். தற்போது நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்துள்ளோம். நீதிமன்றம் எந்த விதமான தீர்ப்பு அளிக்கின்றதோ கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களின் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் கூடி ஆலோசித்து அடுத்த கட்டம் குறித்து  முடிவெடுப்போம். ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கு எந்தவிதமான தார்மீக, அடிப்படையும் இல்லை. அவருக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எந்த சூழ்நிலையிலும் இந்த கட்சியில் சேர்க்கக்கூடாது. நான் உயிருள்ள வரை இவர்களை கட்சியில் சேர்க்க விடமாட்டேன்.  டிடிவி தினகரன்,  ஒரு மாய மான்.  அந்த மாய மானை பற்றி எனக்கு நன்கு தெரியும்.

எந்த சூழ்நிலையிலும் அவரை கட்சியில் சேர்க்கக்கூடாது எனக் கூறியவர். ஆனால்  தற்போது அவரது மனநிலை மாறி உள்ளது என்றால், அதற்கு என்ன காரணம்.  உண்மையாகவே அவர் அரசியல் கொள்கையோடு இல்லை.  உண்மையாகவே ஒரு தலைவரை தலைவராக ஏற்றுக்கொண்டு, அந்தத் தலைவரின் கீழ் பணியாற்றக்கூடிய தொண்டனாக இல்லை. அனைத்துமே தனது சுயநலத்திற்காக கட்சியையும் பயன்படுத்திருக்கிறார், கட்சியின் தலைமையையும் பயன்படுத்திருக்கிறார்,  தற்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக் கூறி,  தனது சுயநலத்திற்காக சசிகலாவையும் பயன்படுத்தி இருக்கிறார் . அதே சசிகலாவை வேண்டாம் எனவும் சொல்லியிருக்கிறார். தற்போது வேண்டுமென்கிறார் என்றால், இவரது சுயநலத்தை வெட்டவெளிச்சமாக இவரே, நாட்டு மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜகவிற்கு வெற்றி கிடைக்கும் என்பது அந்தக் கட்சியின் தலைமைக்கு நன்கு தெரியும். ஓ பன்னீர் செல்வத்திற்கு சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கிடையாது. 

அவர் ஒருவரின் பின்னாலிருந்து பதவிக்கு வந்தவர். அவர்கள் சொல்வதைக் கேட்டு இப்படியே நடக்கக் கூடியவர். சுய சிந்தனை இல்லாதவர், இரட்டை நிலைப்பாடுடன் தான் இருப்பார், பேசுவார். பிரதமர் சொல்லி தான் துணைமுதல்வர் ஆனேன் என அவர் சொல்வது, அவர் எத்தகைய சந்தர்ப்பவாதி,  சுயநலக்காரனாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com