சாலை மண்ணில் வயிற்றுப் பிழைப்பைத் தேடும் குடும்பம்
By தே. சாலமன் | Published On : 21st August 2022 02:26 PM | Last Updated : 21st August 2022 02:26 PM | அ+அ அ- |

தொழிலாளி பிரபு (42).
செய்யாறு பகுதியில் வயிற்றுப் பிழைப்புக்காக சாலை மண்ணில் இருந்து தங்கத் துகள்களை சேகரித்து அதன் மூலம் ஒரு தொழிலாளி குடும்பம் ஜீவனம் செய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையம் கைலாசநாதர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பிரபு (42). இவருக்கு திருமணம் ஆகி பரிமளா என்கின்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன. படிப்பறிவு இல்லாத இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த வேலைக் கிடைக்காத நேரங்களில் அருகில் உள்ள கண்ணமங்கலம், ஆரணி, செய்யாறு, வாலாஜா ஆகிய பகுதிகளுக்கு குடும்பத்தோடு விடியற் காலையில் சென்று, நகை கடைகளுக்கு முன்பாக உள்ள சாலைகளில் சிதறிக் கிடக்கும் சாலை மண்ணை இரண்டு, மூன்று மூட்டைகளாக சேகரிக்கின்றனர்.
இதையும் படிக்க- திருச்சியில் முன்விரோதம் காரணமாக கொத்தனார் வெட்டிப் படுகொலை
பின்னர், சேகரித்த மண்ணை நகரப் பகுதிகளில் ஆங்காங்கே ஓடும் கால்வாய் கழிவுநீர் பகுதிகளில் அமர்ந்து சிறிது சிறிதாக இரும்பு பானலில் கொட்டி பல முறை கழுவி, மண்ணில் தேவையில்லாமல் இருக்கும் மற்றவைகளை நீர் ஊற்றி அப்புறப்படுத்துக்கின்றனர். இதேபோல் கொண்டு வந்த மணல் மூட்டைகள் அனைத்தையும் பல முறை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்துகின்றனர். கடைசியாக மண்ணில் இருக்கும் கறுப்பு துகள்களை மட்டும் சிறிது சிறிதாக சுத்தப்படுத்தி சேகரித்து வைக்கின்றனர். கடைசியாக கண்ணில் தென்படும் மஞ்சள் கலரில் உள்ள தங்கத் துகள்களை மட்டும் ஒன்றாக சேகரிக்கின்றனர்.
இதையும் படிக்க- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய அரசின் ஆவணம் ஆங்கில பத்திரிகைக்கு எப்படி கிடைத்தது?: ஜெயக்குமார் கேள்வி
இவ்வாறு பலமுறை கடுகளவை விட மிகச் சிறிய அளவில் சேகரிக்கப்படும் மஞ்சள் கலரில் உள்ள துகள்கள் அனைத்தையும் ஒரு சேர ஒரு இரும்பு குடுவையில் போட்டு அதன் மீது பாதரசம் ஊற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொதிக்க வைக்கின்றனர். அதன் பின்னர் ஒரு குண்டு மணி அளவிற்கு மஞ்சள் கலரில் இருக்கும் தங்கத் துகள்களை ஒரு சேர சேகரிக்கின்றனர். இவ்வாறு சேகரிக்கும் குண்டுமணி அளவிலான தங்கத்தை, அருகில் உள்ள நகை கடைகளில் கொடுத்து சுமார் ரூ.500 முதல் ரூ.1000 வரையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அதன் மூலம் தொழிலாளி குடும்பம் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து தொழிலாளி கூறியதாவது: மரம் வெட்டும் தொழில் இல்லாத நேரத்தில் பரம்பரைச் தொழிலாக இதை செய்து வருகிறோம். நகைக்கடைகளுக்கு முன்பு உள்ள சாலையில் இருக்கும் மண்ணை சேகரித்து, அந்த மண்ணை சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக உழைத்து அதனை சுத்தப்படுத்தி அதன் மூலம் தங்க துகள்களை சேகரித்து அதனை விற்று குடும்பம் நடத்தி வருகிறோம். படிப்பறிவு இல்லாத நாங்கள் 3, 4 தலைமுறையாக பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம் என்றார்.