தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய அரசின் ரகசிய ஆவணம் ஆங்கில பத்திரிகைக்கு எப்படி கிடைத்தது? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் ஜெயலலிதாவின் அரசுதான் ஆணையம் அமைத்தது. அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து சிபிஐயும் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக இந்த திமுக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. இந்த அரசும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு ஊடகங்கள் தேவையற்ற விவாதங்களை கட்டமைத்து வருகின்றன.