கிருஷ்ணகிரியில் டிச.29இல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 29-ஆம் தேதி முதல் மாட்டின கால்நடைகளுக்கு 8-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,26,480 மாட்டின கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்த முகாம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் எருமாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கூரம்பட்டி கிராமத்தில் தொடங்கிவைக்கப்படுகிறது.
ஜனவரி 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம் குறித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் அறிவிக்கப்படும் தேதிகளில் கால், வாய் நோய் தடுப்பூசி செலுத்தப்படும்.
முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளா்கள் தங்களின் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை வளா்ப்போா் மேற்படி தடுப்பூசியை தங்கள் கால்நடைகளுக்கு செலுத்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
