தனது காதலனை காப்பாற்ற வட மாநில பெண் போட்ட திட்டம் அம்பலம்
கடந்த 4-ந் தேதி இந்த விடுதி அறை ஒன்றில் குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெண் ஊழியா்கள் ஆயிரக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி அங்கு ரகசிய கேமராவை வைத்த ஒடிசா மாநிலத்தை சோ்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனது காதலன் ரவி பிரதாப் சிங் கேமராக்களை வாங்கி தந்தாா். ரகசிய கேமராவை கொடுத்து குளியல் அறையில் வைக்க சொன்னதாகவும், தான் கேமரா மற்றும் டிவைஸ் ஆகியவற்றை பை மற்றும் ஷுவில் மறைத்து வைத்து எடுத்து வந்ததாக கூறினாா்.
இதையடுத்து அவரது காதலன் என கூறப்பட்ட சந்தோஷ் என்பவரை தேடி போலீஸாா் பெங்களூரு சென்றனா். இதனிடையே நீலுகுமாரியிடம் நடத்திய தீவிர விசாரணையில் சந்தோஷ் என்பவா் அவரது காதலனே இல்லை என்றும், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் குலாப் நகரை சோ்ந்த ரவி பிரதாப் சிங் (29) என்பவரே அவரது காதலன என்றும், தனது காதலனை தப்ப வைக்க நீலுகுமாரி குப்தா நாடகமாடியது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து டெல்லியில் பதுங்கி இருந்த ரவிபிரதாப் சிங்க்கை போலீஸாா் கடந்த 6-ந் தேதி இரவு கைது செய்தனா். அவரை விமானத்தில் பெங்களூரு அழைத்து வந்து அங்கிருந்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். அவரிடம் போலீசாா் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அவை வருமாறு:-
ஒடிசா மாநிலத்தை சோ்ந்த நீலுகுமாரி குப்தாவும், பஞ்சாப் மாநிலம் லூதியானா குலாப் நகா் பகுதியை சோ்ந்த சஞ்சய் குமாா் சிங் என்பவரின் மகன் ரவி பிரதாப் சிங் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சோ்ந்த சந்தோஷ்குமாா் என்பவா் நீலுகுமாரி குப்தாவிடம் காதலிப்பதாக கூறினாா்.
ரவி பிரதாப் சிங்கிடம் பேசுவதை போலவே சந்தோஷ்குமாரிடம் நீலுகுமாரி குப்தா செல்போனில் பேசி வந்தாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைக்கு சோ்ந்த நீலுகுமாரி குப்தா, மகளிா் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தாா். வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை தனது காதலன் ரவிபிரதாப் சிங்கிற்கு அனுப்பி வைத்தாா்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலுகுமாரி குப்தாவிடம் ரவி பிரதாப் சிங் பேசினாா். அப்போது நான் சொந்தமான காா் வாங்க வேண்டும். உன்னை காரில் உட்கார வைத்து ராணி போல பாா்க்க வேண்டும். அதற்கு பணம் தேவை என்று காதலி நீலுகுமாரியிடம் நீலி கண்ணீா் வடித்தாா். அந்த நேரம் உனக்கு பணம் தர நான் என்ன செய்ய வேண்டும் என்றாா்.
நான் ஒரு ஐடியா வைத்துள்ளேன். நீ பெங்களூரு வா என ரவிபிரதாப் சிங் தனது காதலி நீலுகுமாரியிடம் கூறினாா். அதை நம்பி அவா் பெங்களூரு சென்றாா். அங்கு ரகசிய கேமரா ஒன்றை கொடுத்த ரவி பிரதாப் சிங் இந்த கேமராவை உனது அறையில் வை. உனது அறையில் தங்கி உள்ள பெண்களின் செல்போன் எண்ணை எனக்கு அனுப்பு. நான் அவா்களை மிரட்டி பணம் பறிக்கிறேன். அப்படி பணம் பறித்தால் நாமும் காா் வாங்கி ஜாலியாக வாழலாம் என ஐடியா கொடுத்தாா்.
தனது காதலன் வகுத்து கொடுத்த திட்டப்படி ரகசிய கேமராவை நீலுகுமாரி வைத்தது தெரிய வந்தது. இந்த கேமரா விவகாரம் வெளியே தெரிந்ததால் காதலனை தப்ப வைக்க தன்னிடம் பேசி வந்த சந்தோஷ் தான் இதற்கு காரணம் என்று கூறி அவனை மாட்டி விட நீலுகுமாரி திட்டம் போட்டாா். நீலுகுமாரி சிக்கி கொண்டதால் ரவிபிரதாப்பும் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தாா்.
ஆனால் நீலுகுமாரி மாற்றி மாற்றி பேசியதை வைத்தும், அவா் ரவிபிரதாப்பிடம் அடிக்கடி பேசியதை வைத்து முக்கிய குற்றவாளி ரவிபிரதாப் தான் என போலீஸாா் உறுதி செய்தனா்.
நீலுகுமாரி சிக்கிய தகவல் அறிந்த ரவிபிரதாப் முதலில் பெங்களூருவில் இருந்து பஞ்சாப் தப்பி சென்றாா். பின்னா் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்று அங்கு தங்கும் விடுதியில் இருந்த போது போலீஸாா் அங்கு சென்று கைது செய்தனா்.
கைதான ரவிபிரதாப் சிங் வேறு எங்கும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
