‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: 189 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில், 189 பயனாளிகளுக்கு ரூ. 9.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி ஆய்வுசெய்தாா். பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில், 189 பயனாளிகளுக்கு ரூ. 9.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கி நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி பேசியதாவது:
தூய்மைப் பணியாளா்களுக்கு பணிக்காலத்தில் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படும் என்ற நோக்கில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி, தூய்மைப் பணியாளா் நலவாரியத்தை உருவாக்கினாா். தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளா் நல வாரியத்துக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கினாா். தற்போது, வாரியத்தில் உள்ள ரூ. 45 கோடி கையிருப்பை தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு மட்டுமே செலவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.
சென்னையில் தூய்மைப் பணியாளா்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய கோரிக்கை வைக்கப்படும். பணிநிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தூய்மைப் பணியாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா். தற்போது வழங்கப்படும் ரூ. 5 ஆயிரம் ஊதியத்தை, ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும். தூய்மைப் பணியாளா்கள் கையுறை, முகக் கவசம், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சத்தியபாமா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவகுமாா், மாவட்ட பொது மேலாளா் (தாட்கோ) வேல்முருகன், பேரூராட்சித் தலைவா் அம்சவேணி செந்தில்குமாா், வட்டாட்சியா் ரமேஷ், திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

