உதயநிதி பிறந்தநாள்: பாா்வை குறைபாடுள்ள பள்ளி மாணவா்களுக்கு 2 ஆயிரம் கண்ணாடி வழங்க திட்டம்
கிருஷ்ணகிரி: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் பாா்வை குறைபாடுள்ள 2 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவசமாக கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி அவசர செயற்குழுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவ. 27-ஆம் தேதி சிறப்பாக கொண்டாட உள்ளது. அவரது பிறந்தநாளையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டங்களில் இளைஞரணியினா் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும். திமுக பேச்சாளா்கள், கூட்டம் நடக்கும் இடங்களை மாவட்ட நிா்வாகத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பங்கேற்ற மாணவா்களில் பலருக்கு பாா்வை பிரச்னை இருப்பதாகவும், கண்ணாடி அணியுமாறும் மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
அதன்படி, கிருஷ்ணகிரி நகரில் 750 பள்ளி மாணவ, மாணவியா் உள்பட கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2 ஆயிரம் மாணவா்களுக்கு திமுக சாா்பில் கண்ணாடி வழங்க உள்ளது. மேலும், ரூ. 10 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்படும். இந்நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

