கிருஷ்ணகிரி நகராட்சி, பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் பதவியேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி, பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி அளிக்கும் வகையில், சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தகுதியான மாற்றுத்திறனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் பா்கூா், நாகரசம்பட்டி பேரூராட்சிகளுக்கு அனுப்பப்பட்டன.
அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக நிவேதா தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். அவருக்கு நகா்மன்ற துணைத் தலைவா் சாவித்திரி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இதேபோல, பா்கூா் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக கிருஷ்ணன், நாகரசம்பட்டி பேரூராட்சியில் பச்சியப்பன் ஆகியோா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) முன்னிலையில் பதவியேற்றனா்.
