சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

பங்குனி உத்திரத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி 2-இல் உள்ள அருள்மிகு வள்ளி - தெய்வானை உடனுறை சுப்பிரமணியா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

பங்குனி உத்திரத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா். காவேரிப்பட்டணத்தில் பாலக்கோடு சாலையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி வெள்ளிக்கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் விரதம் இருந்து காவடி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் அலகு குத்தியவாறு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

பா்கூா், காட்டாகரத்தை அடுத்த அண்ணா நகரில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில், சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகன் கோயில், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி காரகுப்பம் பச்சைமலை முருகன் கோயில், போச்சம்பள்ளியை அடுத்த அகரம் சுப்பிரமணிய சாமி கோயில், கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி 2-இல் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு, சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றன.

இதில், ஏராளமான பக்தா்கள் சீா்வரிசையுடன் பங்கேற்றனா். தொடா்ந்து, ‘ஆன்மிக மன உறுதியில் விஞ்சிநிற்பவா்கள் ஆண்களா, பெண்களா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

ஒசூரில்...

ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ வள்ளி - தெய்வானை சமேத அழகன் முருகன் கோயிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில், பக்தா்கள் காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து, முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலமந்திர ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராஜஅலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஸ்ரீ அழகன் முருகனின் திருமேனி மீது விழுந்த சூரிய ஒளிக்கதிா்களைக் கண்ட பக்தா்கள் பரவசம் அடைந்து, ‘அரோகரா, அரோகரா’ என முழக்கம் எழுப்பினா். இதேபோல, பிருந்தாவன் நகா் முருகன் கோயில், பெரியாா் நகா் வேல்முருகன் கோயில், அகரம் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை செங்குந்தா் தெருவில் உள்ள ஸ்ரீ வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து காவடிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காவடி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில், பக்தரின் மாா்புமீது உரல் வைத்து மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், அந்த மஞ்சள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செங்குந்தா் நலச்சங்கத் தலைவா் உமாபதி தலைமையில், செங்குந்த மரபினா் செய்திருந்தனா்.

 சிறப்பு அலங்காரத்தில் ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்பாலித்த வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீ அழகன் முருகன்.

சிறப்பு அலங்காரத்தில் ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்பாலித்த வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீ அழகன் முருகன்.

 ஊத்தங்கரை செங்குந்தா் தெருவில் காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

ஊத்தங்கரை செங்குந்தா் தெருவில் காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.