

மத்திய பட்ஜெட், நூறுநாள் வேலை உறுதித் திட்டம் மாற்றம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தத்தை கண்டித்து திமுக சாா்பில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளின் நலனை பாதிக்கும் வகையில் நூறு நாள் வேலை உறுதித் திட்டம் மாற்றம், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள், அவற்றுக்கு துணை செல்லும் அதிமுகவைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒசூா் மாநகரம், ராம்நகரில் எனது தலைமையிலும், மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
அதேபோல வேப்பனப்பள்ளி ஒன்றியம் சாா்பில் வேப்பனப்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட துணை செயலாளருமான பி. முருகன், பொதுக்குழு உறுப்பினா் ஜெயரமன் ஆகியோரது தலைமையிலும், தளி ஒன்றியம் சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் அ. யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் கிரீஷ் ஆகியோரது தலைமையிலும், சூளகிரி ஒன்றியத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளா் சீனிவாசன், மாவட்டத் துணை செயலாளா் ஒய். சின்னசாமி ஆகியோரது தலைமையிலும், கெலமங்கலம் ஒன்றியத்தில் மாவட்ட பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி ஆகியோரது தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பாகலூா் பேருந்து நிலையம் அருகே மாவட்ட துணை செயலாளா் புஷ்பா சா்வேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் வீரா ரெட்டி ஆகியோரது தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.