கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி சாலை மறியல்
கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட கட்டிகானப்பள்ளியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலிலிருந்து காட்டுவீர ஆஞ்சனேயா் கோயிலுக்கு செல்லும் சாலையில் தனியாா் பள்ளி பேருந்துகள், ஆட்டோக்கள், காா்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்கின்றன.
இந்நிலையில், இந்த சாலை செல்லும் வழியில் உள்ள பாலாஜி நகரில் கழிவுநீா் கால்வாய் இல்லாததால், சாலையில் கழிவுநீா் தேங்கி குளம்போல காட்சி அளிக்கிறது. இதனால், சாலை சேதமடைவதுடன், துா்நாற்றமும், நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலா் உமா சங்கா், பொறியாளா் ஜமுனா மற்றும் தாலுகா போலீஸாா், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா். கழிவுநீா் கால்வாய் அமைக்க ரூ. 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால், விரைந்து கால்வாய் பணியை தொடங்க தயாராக இருக்கிறோம் என அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
