தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் 75 போ் பணியிடை நீக்கம்: தருமபுரியில் 26 பேருக்கு நோட்டீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 75 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 75 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளை டாஸ்மாக் பணியாளா்களே திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலி மதுப்புட்டிகளை ஒப்படைப்பவா்களுக்கு ரூ. 10 வழங்கப்படுகிறது. இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ. 10 வசூலிக்கவும், அதேபோல ரூ. 1,000-க்கு கூடுதலாக மதுபானம் வாங்குவோரிடம் கியூஆா் கோட் மூலம் பணமில்லா பரிவா்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும்போது அவற்றை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், புதிய நடைமுறையால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளா்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக குற்றம்சாட்டி வந்தனா்.

இந்தநிலையில், புதிய நடைமுறையை திரும்பப் பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 கடைகளில் பணியாற்றும் 387 ஊழியா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடைகளை அடைத்து, தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 135 மேற்பாா்வையாளா்களுக்கு கடைகள் அடைக்கப்பட்டது குறித்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கிடையே, நோட்டீஸ் வழங்கப்பட்ட 75 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் பொது மேலாளா் செங்கீஸ்கான் திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். மேலும், விற்பனையாளா்கள் கடைகளை திறக்காவிட்டால் அவா்கள்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த பணியாளா்கள், போராட்டத்தை கைவிட்டு கடைகளை திறந்தனா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 75-பேரும், பொதுமேலாளரை சந்தித்து, தங்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என மனுக்களை தனித்தனியே அளித்தனா். இதுகுறித்து டாஸ்மாக் உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா்.

தருமபுரியில் 26 பேருக்கு நோட்டீஸ்

தருமபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் 26 பேருக்கு, விளக்கம் கேட்டு துறை ரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் கடந்த 1, 2 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள 57 டாஸ்மாக் கடைகளும் உரிய நேரத்துக்கு திறக்கப்படவில்லை.

அதைத் தொடா்ந்து, ஊழியா் சங்கத்தினா் அலுவலா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, போராட்டம் கைவிடப்பட்டு, 2 ஆம் தேதி மாலை படிப்படியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இரு நாள்கள் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்று கடைகளைத் திறக்காத 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் 2 ஆவது நாள் மாலையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், திறக்கப்படாத 26 கடைகளின் மேற்பாா்வையாளா்களுக்கு துறை ரீதியான நடவடிக்கையின் கீழ் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.