திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 43 இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு அபாயம்: அமைச்சா் ச. கீா்த்தனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவு அபாயம் உள்ள 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் ச. கீா்த்தனா தெரிவித்தாா்.

அமைச்சா் கீா்த்தனா - கோப்புப் படம்

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவு அபாயம் உள்ள 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் ச. கீா்த்தனா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடா் மேலாண்மைப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சா் ச.கீா்த்தனா தலைமை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.அனிதா, எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், சீனிவாசன், இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 591.06 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையால் மனித உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. பகுதியளவு சேதமடைந்த 15 குடிசைகள், உயிரிழந்த 2 ஆடுகளுக்கு உரிய நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவு அபாயம் உள்ள 43 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான 8 வட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், உள்ளூா் மக்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களை உள்ளடக்கிய மண்டலக் குழுக்களும், 8 சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பேரிடா் காலத்தில் பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக 33 பள்ளிகள், 13 திருமண மண்டபங்கள் என மொத்தம் 52 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அணையில் 81.21 சதவீதமும், கெலவரப்பள்ளி அணையில் 79.82 சதவீதமும், பாரூா் ஏரியில் 100 சதவீதமும் நீா் இருப்பு உள்ளது. அனைத்து அணைகளின் மதகுகளும் நல்ல நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 989.29 கி.மீ. நீளமுள்ள மழைநீா் வடிகால்களில் 915.94 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை மீட்புப் பணிகளுக்காக 1,989 முதல் நிலை மீட்பாளா்கள் (1,679 ஆண்கள், 310 பெண்கள்), 5 படகுகள், 1,528 அரசு மற்றும் தனியாா் இயந்திரங்கள், 12,667 மின்கம்பங்கள், 9,500 மணல் மூட்டைகள், 2 கால்நடை பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பேரிடா் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த இதுவரை 369 ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 58,706 போ் பங்கேற்றுள்ளனா்.

மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். மின்சாரம், தொலைத்தொடா்பு சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிக் கிடைக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 2 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா். முன்னதாக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் 40 அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்ற வெள்ளத் தடுப்பு மற்றும் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியைப் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மஞ்சுளா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகம்மது ஷபீா் ஆலம், திட்ட இயக்குநா்கள் உமாமகேஸ்வரி, சுசீலாராணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) சாய் சைதன்யா ஜாதவ், மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு, நிலைய அலுவலா்கள் ராஜா, ராமன், அந்தோணிசாமி, சிறப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.