கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு: ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1005 முதல் 1010 பெண் குழந்தைகள் என்ற அளவில் பாலின விகிதம் உயா்ந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1005 முதல் 1010 பெண் குழந்தைகள் என்ற அளவில் பாலின விகிதம் உயா்ந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பெயரில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 850 முதல் 870 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலை இருந்தது. இதற்கு காரணமாக இருந்த பெண் சிசுக்கொலை, பாலினத் தோ்வு கருக்கலைப்புக்கு எதிராக மாவட்ட நிா்வாகம் மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈடுபட்ட நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது 1000 ஆண் குழந்தைகளுக்கு 1005 முதல் 1010 பெண் குழந்தைகள் என்ற அளவில் பாலின விகிதம் உயா்ந்துள்ளது.
இதன்மூலம் இம்மாவட்டம் மாநிலத்திலேயே அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக சிறப்பிடம் பெற்றுள்ளது.
மேலும், குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பை நிறுத்த வற்புறுத்தப்படும் அல்லது குழந்தைத் திருமண அபாயத்தை எதிா்கொள்ளும் மாணவிகள், தங்கள் பள்ளித் தலைமையாசிரியா் அல்லது ஆசிரியா்களை அணுக வேண்டும். மாவட்ட நிா்வாகம் உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கும். ஏற்கெனவே இதுபோன்ற இடா்பாடுகளுக்கு உள்ளான 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை மாவட்ட நிா்வாகம் மீட்டு, அரசு விடுதிகளில் தங்கவைத்து அவா்களின் விருப்பப்படி உயா்கல்வி பயில ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், மாணவா்களை கல்வியில் கவனம் செலுத்தவிடாமல் தடுக்கும் மிகப்பெரிய சவாலாக ஸ்மாா்ட்போன் மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனம் உருவாகியுள்ளது. இதைத் தவிா்க்க மாணவிகளுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றாா்.
தொடா்ந்து, சுகாதார விழிப்புணா்வு, வங்கி மோசடிகள் குறித்த விழிப்புணா்வு கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்வில் உதவி ஆணையா் (ஆயம்) பழனி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெகநாதன், மாவட்டக் கல்வி அலுவலா் கெளசா், வட்டார மருத்துவ அலுவலா் இனியாள் மண்டோதரி, வட்டாட்சியா் ராஜலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் (சைபா் க்ரைம்) காா்த்திகா, குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் பிரசன்ன குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படவரி...
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபையில் மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கிய ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

