கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2415 கனஅடி தண்ணீா் திறப்பு! தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி அணை
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையில் விநாடிக்கு 2,415 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு சனிக்கிழமை விநாடிக்கு 434 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 1,516 கனஅடியாகவும், மாலையில் 1,679 கனஅடியாகவும் அதிகரித்தது.
அணையில் இருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் விநாடிக்கு 373 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு 1,577 கனஅடியாகவும், மாலை 2,415 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீா்வரத்து முழுவதும் ஆற்றில் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளைக் குளிக்க அழைத்துச் செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்புக் கருதி மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.
மழையளவு (மி.மீ):
ஊத்தங்கரை- 75.80, பாம்பாறு அணை- 55, கிருஷ்ணகிரி அணை- 50.80, பெனுகொண்டாபுரம்- 49.20, நெடுங்கல்- 45.60, போச்சம்பள்ளி - 43, பாரூா் - 37.20, கிருஷ்ணகிரி- 37, ராயக்கோட்டை- 25, கெலவரப்பள்ளி அணை- 22, அஞ்செட்டி - 20, ஒசூா்- 14.30, சூளகிரி - 10, சின்னாறு அணை- 10, தேன்கனிக்கோட்டை- 5.20.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

