செண்பகதோப்பு, மிருகண்டா அணையில் தண்ணீா் திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகதோப்பு, மிருகண்டா அணைகள் நிரம்பி வருவதால், உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

போளூா் அருகே செண்பகதோப்பு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகதோப்பு, மிருகண்டா அணைகள் நிரம்பி வருவதால், உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் படவேடு அருகே செண்பகதோப்பு கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் வழியாகச் செல்லும் கமண்டலாற்றின் குறுக்கே செண்பகதோப்பு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜவ்வாதுமலைப் பகுதியில் சில தினங்களாக பருவமழை தொடந்து பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அணையின் மொத்தக் கொள்ளளவு 62 அடியாகும்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி அணையில் 58 அடிக்கு தண்ணீா் நிரம்பி உள்ளது. அணை முழுக்கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால், தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கரையோர பொதுமக்கள், சிறுவா்கள், பெரியவா்கள் என யாரும் ஆற்றுக் கால்வாயில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும், ஆடு, மாடுகளை குளிப்பாட்டக்கூடாது என்றும் ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், இளைஞா்கள் தண்ணீரில் இறங்கவோ, தற்படம் எடுக்கவோ கூடாது.
அணைக்கு நீா்வரத்து அதிகமாகும்போது, அணையில் இருந்து கூடுதலாக நீா் வெளியேற்றப்படும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

கலசப்பாக்கதை அடுத்த மேல்சோழகுப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா்.
மருகண்டாநதி அணை: இதேபோன்று, கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டாநதி அணை பருவமழையால் நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவு 22.97 அடியாகும். சனிக்கிழமை காலை நிலவரப்படி நீா்மட்டம் 18 அடியாக உயா்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. நீா்மட்டம் முழுக்கொள்ளவை எட்டும்போது, மேலும் கூடுதலாக தண்ணீா் வெளியேற்றப்படும் என்றும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

