ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டை ஏரி சாய ஆலைகளின் ரசாயனக் கழிவால் மாசடைந்து கால்நடைகள், பறவைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகள் வளர்ப்போர், பறவைகள் பராமரிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துக் குஞ்சுகளுக்கு தண்ணீர் கிடைக்காததால், அவற்றை வளர்ப்போர் மாற்று இடம் தேடி அழைத்துச் செல்கின்றனர்.
ராசிபுரத்தை அடுத்துள்ள தட்டான்குட்டை பகுதியைச் சுற்றிலும் விளைநிலங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
மேய்ச்சலுக்கு கால்நடைகள் வளர்ப்போர் இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதியையே நம்பியுள்ளனர். இந்த ஏரியில் தேங்கிய தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான வாத்துக் குஞ்சுகளும் தொழில் ரீதியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்தப் பகுதியில் விதிமுறைகளுக்கு முரணாகச் செயல்பட்டு வரும் துணிகளுக்குச் சாயமிடும் ரசாயன சாய ஆலைகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த ஏரி கோடையால் வறண்டு வருவதாலும், அந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளால் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் கால்நடைகள், பறவைகளுக்கு ஆபத்தை விளைவித்து வருவதாக, அந்தப் பகுதியினர் குற்றம்சாட்டினர். இதனால், தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் ஏரியின் நீரை குடிக்காத வண்ணம் பராமரிக்க வேண்டிய நிலைக்கு, தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த ஏரியில் வளர்க்கப்பட்ட வந்த வாத்து குஞ்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வருவதால், அவற்றை வளர்ப்போர் மாற்று இடம் தேடி அலைந்து வருகின்றனர்.
விவசாய நிலங்கள், கால்நடைகள், பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ரசாயனக் கழிவுகள் ஏரியில் கலக்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.