நலவாரியங்களில் பதிவு செய்வதன் அவசியம் குறித்து தொழிலாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. அத்தகைய விழிப்புணர்வை நலவாரிய அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சட்டப்
பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர் (நாமக்கல்),
உ.தனியரசு (பரமத்திவேலூர்) முன்னிலை வகித்தனர். தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது:
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்து பிற மாநிலங்களும் வியந்து பாராட்டும் அளவுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியவர் ஜெயலலிதா. அவர் செயல்படுத்தியுள்ள திட்டங்களில் மிகச் சிறந்த திட்டமாக தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் திகழ்கிறது.
இத்திட்டத்தின் மூலமாக கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பல்வேறு நிதியுதவிகள் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறையின் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் மூலம் கடந்த
3 ஆண்டுகளில் ரூ.17.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 49,656-க்கும் மேற்பட்ட நலவாரிய உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நலவாரியங்களில் பதிவு செய்வதன் அவசியம் குறித்து இன்னும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை தொழிலாளர்களுக்கும், நலவாரிய உறுப்பினர்களுக்கும் அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.
இதுவரை பதிவு செய்யாத பல்வேறு வகையாக தொழில் புரியும் தொழிலாளர்கள் அந்தந்த நலவாரியத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம்
7078 பயனாளிகளுக்கு
ரூ.1.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியங்கள் மூலம் 325 பயனாளிகளுக்கு ரூ.11.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு கட்டுமானம் தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் 1,460 பயனாளிகளுக்கு
ரூ.36.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 8,863 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.
தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்பு) சி.மஞ்சள்நாதன் வரவேற்றார். கோட்டாட்சியர் க.காளிமுத்து, நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன், நாமக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கவிதாசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.