காந்தியத்தை விதைத்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் படைப்புகளை மாணவர்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது சிந்தனைகளை அடியொற்றி நடக்கும் சமூக சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த அம்மணியம்மாள்-வெங்கட்ராமன் பிள்ளை தம்பதிக்கு 8-ஆவது குழந்தையாக 1888-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி பிறந்தார்.
நாமக்கல் நம்மாழ்வர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, 1930-இல் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ராஜாஜியுடன் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை நடைபயணமாகச் சென்றார். அப்போது, இவர் பாடிய "கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது" என்ற அவரது பாடல் வழிநடைப் பாடலாக அமைந்தது.
"தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்ற கவிஞரின் வரிகள் தமிழ் உணர்வாளர்களைத் தட்டி எழுப்பியது உண்மை. இதற்குப் பின்னர் இவர் நாடறிந்த கவிஞரானார். 15.8.1949-இல் தமிழகத்தின் ஆஸ்தான கவிஞரானார். 1971-ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயர்ந்த பத்மபூஷண் விருதைப் பெற்றார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நாமக்கல் கவிஞர் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச் சிறப்பு பெற்றவர், ஓவியராக, சிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக, விடுதலைப் போராட்ட வீரராக பல்வேறு பன்முக வித்தகராக இவர் திகழ்ந்துள்ளார். இது மட்டுமின்றி, பல திரைப்படப் பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி காந்தியக் கொள்கைகளை தமிழகத்தில் பரப்பியவர்.
84 ஆண்டுகள் வாழ்ந்த தேசிய, காந்தியக் கவிஞர், காவிய ஓவியர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 1972-ஆம் ஆண்டு ஆகஸ்டு 24-ஆம் தேதி சென்னையில் தாம் போற்றிய தமிழ்கூறு நல்லுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்.
நினைவகத்தில் நூலகம்:
தமிழனாகப் பிறந்து தமிழர்களின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு நாமக்கல்லில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அமைத்து, அங்கு நூலகத்தையும் உருவாக்கியுள்ளது. இங்கு தற்போது 12,800 நூல்கள் உள்ளன. இதில் 1,790 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் நாளிதழ்கள், நூல்களை வாசித்து பயன் பெறுகின்றனர்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகளை இளம் தலைமுறையினர் குறிப்பாக, மாணவர்கள் நல்லமுறையில் படித்து அறிந்து கொள்ள வேண்டும். அவரின் படைப்புகளில் உள்ள கருத்துகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே அவர் அடியொற்றி நடக்கும் சமூக நலனில் அக்கறை உள்ளோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.