முட்டைக்கோழி பண்ணைத் தொழில் கடும் சோதனையை எதிர்கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி அளவுக்கு பண்ணையாளர்கள் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், 100 பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.
1970-களில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், நாமக்கல் பகுதியில் விவசாயம் சார்ந்த உப தொழிலாக அதிகபட்சமாக 500 கோழிகள் வைத்து பண்ணைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடைந்து, தற்போது சுமார் 1,200 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில், சுமார் 1,000 பண்ணைகள் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மட்டுமே உள்ளன.
இதில், 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோழிகள் வரை 600 பண்ணைகளும், 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை 400 பண்ணைகளும், 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை 200 பண்ணைகளும், 5 லட்சம் கோழிகள் உள்ள 5 பண்ணைகளும் உள்ளன.
1980-களில் மிகவும் லாபகரமானதாக இத் தொழில் இருந்தது. வறட்சி, பறவைக் காய்ச்சல் போன்ற இயற்கை சீற்றங்களால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சில மாதங்கள் இழப்பைச் சந்திக்க நேர்ந்தாலும், அடுத்துவரும் ஆண்டுகளில் லாபகரமானதாக இருந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இத் தொழில் கடுமையான நெருக்கடியில் உள்ளது.
மூடப்பட்ட பண்ணைகள்: முட்டை விலையானது, உற்பத்தி செலவைக் காட்டிலும் குறைவாக விற்கப்படுவதால், தொடர் இழப்பை பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். பண்ணையாளர்கள் கணக்கீட்டின்படி, முட்டை ரூ.3.50-க்கு கீழே விற்கப்படுமாயின், அது நஷ்டம் தான். கடந்த 3 ஆண்டுகளாக, முட்டையின் சராசரி விலை ரூ.2.50 முதல் ரூ.3 வரை மட்டுமே உள்ளது. உரிய விலை கிடைக்காததால் ஏற்பட்ட நஷ்டத்தில் சுமார் 100 கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 80 பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பண்ணைகள் பெரும்பாலும் 1 லட்சம் முட்டைக் கோழிகளை வைத்திருந்தவை. இந்த பண்ணைகள் மூடப்பட்டதால், இங்கு முதலீடு செய்திருந்த சுமார் ரூ.500 கோடி முதலீட்டுத் தொகையை பண்ணையாளர்கள் முழுவதுமாக இழந்தனர்.
3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி நஷ்டம்: தமிழத்தில் தற்போதுள்ள 1,200 பண்ணைகளில், சுமார் 5 கோடி கோழிகள் உள்ளன. தினமும் சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சராசரியாக முட்டைக்கு தினமும் 50 காசு வரை பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால், ரூ.1,000 கோடி அளவுக்கு பண்ணையாளர்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனால், பண்ணைகள் தொடர்ந்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலை நிர்ணயத்தில் குளறுபடி: முட்டை விலையை நிர்ணயம் செய்வது, கோழிப் பண்ணையாளர்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உதவுவது போன்றவற்றை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) செய்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக, என்இசிசி இந்தப் பணிகளை முழுவீச்சோடு செய்வதில்லை என கோழிப் பண்ணையாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
சந்தை விலையை அறிந்து முட்டை விலை நிர்ணயம் செய்யாதது, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட குறைந்த விலைக்கு வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்வதைத் தடுக்க உரிய முயற்சி மேற்கொள்ளாதது போன்றவற்றால், முட்டைக்கோழி பண்ணையாளர்கள் கடும் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நல வாரியம் கோரும் பண்ணையாளர்கள்: முட்டைக்கோழி பண்ணையாளர்களுக்கு தற்போதுள்ள பெரிய பிரச்னை, தீவன விலையேற்றம். கடந்த மூன்று ஆண்டுகளில், தீவன விலை 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது, தீவனங்கள், மருந்துகள் விலை 50 சதவீதம் உயர்ந்தால் முட்டை விலை 5 சதவீதம்தான் உயருகிறது. இதனால், பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. முட்டையை மைனஸ் விலைக்கு விற்கக் கூடாது. இதனை என்இசிசி கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் பண்ணையாளர்கள் இழப்பைச் சந்திப்பது தவிர்க்கப்படும்.
இதுபோல், சத்துணவு முட்டை டெண்டரில், பண்ணையாளர்கள் நேரடியாக பங்கேற்கும் பழைய நடைமுறை மீண்டும் வர வேண்டும். தீவன மூலப்பொருள்களை வேளாண் துறை மூலம் அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும். கோழிப் பண்ணையாளர்களின் பிரச்னைகளை அரசின் நேரடி கவனத்துக்கு எடுத்துச்செல்ல, கோழிப் பண்ணையாளர்களுக்கென தனியாக நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதுபோல் தொடர் இழப்பால் வருமான வரி செலுத்தாத பண்ணையாளர்களிடம், வருமான வரித் துறையினர் கணக்குகளை ஆய்வு செய்வதாக நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். வங்கிக் கடனை செலுத்த முடியாமல் பரிதவிக்கும் பண்ணையாளர்களை, வருமானவரி செலுத்த நிர்பந்தப்படுத்துவதை கைவிட மத்திய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
பண்ணையாளர்களை ஒருங்கிணைக்க முயற்சி: பண்ணையாளர்கள் வியாபாரிகளை மட்டுமே நம்பியதால்தான், நஷ்டத்துக்கு தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். சிறு பண்ணையாளர்களிடமிருந்து அன்றைய விலை நிலவரப்படி சம்மேளனம் நேரடியாக முட்டையைக் கொள்முதல் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளது என வாங்கிலி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.