சேந்தமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமையுமா?

சேந்தமங்கலம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற தேர்தல் நேர வாக்குறுதி பல ஆண்டுகளாக வெற்று வாக்குறுதியாகவே தொடர்வதால், சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு எட்டாக்கனியாகவே உள்ளது.
Updated on
2 min read

சேந்தமங்கலம், கொல்லிமலை மாணவர்கள் ஏக்கம்

சேந்தமங்கலம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற தேர்தல் நேர வாக்குறுதி பல ஆண்டுகளாக வெற்று வாக்குறுதியாகவே தொடர்வதால், சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு எட்டாக்கனியாகவே உள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை வருவாய் வட்டங்களில் ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். பள்ளிக் கல்வியை முடிக்கும் இப் பகுதி மாணவர்கள் கலைக் கல்லுôரிகளில் சேர நாமக்கல் நகருக்குத்தான் வர வேண்டும்.

நாமக்கல் நகரில் இருந்து கொல்லிமலை சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், சேந்தமங்கலம் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நாமக்கல் வருவாய் வட்டத்தில் இந்தப் பகுதிகள் இப்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொல்லிமலை தனி வருவாய் வட்டமாகவும், சேந்தமங்கலம் தனி வருவாய் வட்டமாகவும் பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் சேந்தமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கூறுகின்றனர். ஆனால், இப்போது வரை அது வெற்று வாக்குறுதியாகவே உள்ளது.

கொல்லிமலையில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 500 மாணவர்கள் பிளஸ் 2 முடிக்கின்றனர். இதில் 10 சதவீதம் பேர் கூட உயர்கல்வியைப் பெற முடியவில்லை. சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி செல்லும் சாலையில் அரசுக் கல்லூரி அமைந்தால், கொல்லிமலை மாணவர்கள் 2 மணி நேரப் பயணத்திலும், எருமபட்டி, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 30 முதல் 50 நிமிட நேர பயணத்திலும் கல்லூரிக்கு வந்து செல்ல முடியும்.

நாமக்கல்லில் உள்ள அரசு கலைக் கல்லூரி நாமக்கல் நகரில் இருந்து 7 கி,மீ. தொலைவில் மோகனூர் சாலையில் உள்ளது. இதனால் கொல்லிமலை மலை கிராம மாணவர்கள், சேந்தமங்கலம் வட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் 2 முதல் 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்போடு வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மாறாத வாக்குறுதி: இதுகுறித்து சேந்தமங்கலம் வட்டம், பொட்டிரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்வியாளர் சீனிவாசன் தெரிவித்தது: சேந்தமங்கலம் தொகுதியில் இதுவரை பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு, கடந்த 60 ஆண்டுகளில் இந்த தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்று கிராமப்புற மாணவர்களின் உயர் கல்விக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் எந்தக் கல்லூரிகளும் தொடங்கப்படவில்லை. இந்த ஆட்சியில் கொல்லிமலையில் அரசு ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டுள்ளது சற்று ஆறுதலான விஷயம்.

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 20 ஏக்கர் அளவுக்கு இப்போதும் காலியிடமாக உள்ளது. 1,100 மாணவர்கள் படிக்கும் இப் பள்ளியில் 200 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இந்த வளாகத்திலேயே அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி இரண்டுமே கட்டும் அளவுக்கு இடம் உள்ளது. ஆனால், இப் பள்ளி வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகப் புதிய கட்டடம் கட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் இத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சேந்தமங்கலம் பகுதியில் அரசு கலைக் கல்லுôரி அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர். வெற்றி பெற்றவுடன் வழக்கம்போல் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர். அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம், விரைவில் வந்துவிடும் என்ற பதில்தான் கிடைக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com