அக்.2-இல் திருவாரூரில் நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கை மாநாடு

நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கை மாநாடு வரும் அக்டோபர் மாதம்

நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கை மாநாடு வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ளது என்றார் அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலரும், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவருமான கு.பாலசுப்பிரமணியன்.
 அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செயல்படும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையான ஊதியத்தைக் கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
 அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்றவை நியாயவிலைக் கடைகளுக்கு குறைவான அளவே தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதனால், பணியாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே, தமிழக அரசு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையில் அனைத்துப் பொருள்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும். கடைகளுக்கு பொருள்களை எடையிட்டு வழங்க வேண்டும்.
 பணி வரன்முறை செய்யாத பணியாளர்களுக்கு உடனடியாக பணி வரன்முறை செய்ய வேண்டும், மளிகைப் பொருள்களையும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி திருவாரூரில் மாநாடு நடைபெறவுள்ளது.
 தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படுவதை டாஸ்மாக் பணியாளர் சங்கம் வரவேற்கிறது. வேலை இழக்கும் டாஸ்மாக் பணியாளர்களை, அந்தந்த மாவட்டங்களில் காலியாக உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளில் அல்லது அதிகம் விற்பனையாகும் கடைகளில் கூடுதலாக பணியமர்த்த வேண்டும்.
 8-வது ஊதிய மாற்று பணிகளை மாநில அரசு உடனடியாகத் தொடக்க வேண்டும். அதில் 7-ஆவது ஊதிய மாற்றில் இருந்த குறைபாடுகள் களையப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இல்லாத பணியாளர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார், நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன், பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 முன்னதாக நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com